இளைஞர் சந்தேக மரணம் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்(30), மோட்டார் மெக்கானிக். இவரது நண்பர் யுகேந்திரன் என்பவர் 13 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

இதுதொடர்பாக, கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்தச் சிறுமியின் வீட்டுக்கு கார்த்திக், யுகேந்திரன் உட்பட 4 பேர் சென்று, தகராறு செய்ததுடன், சிறுமியை கடத்திச் சென்று விடுவோம் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில், யுகேந்திரன், கார்த்திக் உள்ளிட்ட 4 பேரையும் நேற்று முன்தினம் நீலக்குடி காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக வரும்படி போலீஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சாத்தனூர் மஞ்சளாற்றங்கரையில் உடல் முழுவதும் தீயில் எரிந்த நிலையில் கார்த்திக் இறந்துகிடந்தார். அவரது உடலை திருநீலக்குடி போலீஸார் மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு நேற்று பிரேத பரிசோதனை நடைபெற்றது.

அப்போது, மருத்துவமனைக்கு வந்த கார்த்திக்கின் உறவினர்கள், கார்த்திக்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது இறப்புக்கு காரணமாக சிறுமியின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், சடலத்தை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த ஏடிஎஸ்பி ஜெயச்சந்திரன், டிஎஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானமடைந்த கார்த்திக்கின் உறவினர்கள், அவரது உடலை பெற்றுச் சென்றனர். தொடர்ந்து, போலீஸாரின் விசாரணைக்கு பயந்து கார்த்திக் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது எரித்துக் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்