மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் இளையாளூர் ஊராட்சியில் உள்ளது வடகரை கிராமம். இதைச் சுற்றியுள்ள அன்னவாசல், கழனிவாசல், முத்தூர், நரசிங்கநத்தம், இளையாளூர், அரும்பூர் மற்றும் குளிச்சார் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக, வடகரைக்கு வந்துசெல்கின்றனர்.
மறைந்த முதல்வர் காமராஜரால், கடந்த 1957-ம் ஆண்டு வடகரையில் தொடங்கப்பட்ட கிராம மருத்துவமனை, தற்போது துணை சுகாதார நிலையமாக இயங்கி வருகிறது.
இந்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள 360 மாவட்டங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் துணை சுகாதார நிலையங்களை 2022-ம் ஆண்டுக்குள் சுகாதார குடும்ப நல மையமாக மாற்றியமைக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வடகரை துணை சுகாதார நிலையத்தையும் சுகாதார குடும்ப நல மையமாக தரம் உயர்த்தினால், ஊரகப் பகுதியைச் சேர்ந்த மக்களின் மகப்பேறு, குழந்தைகள் நலன், ஊட்டச்சத்து, தொற்று மற்றும் தொற்றா நோய் கண்டறிதல், உயர் ரத்த அழுத்த பரிசோதனை, நீரிழிவு நோய் பரிசோதனை போன்ற சேவைகளை பெற இயலும்.
எனவே, வடகரை துணை சுகாதார நிலையத்தை ஒருங்கிணைந்த சுகாதார குடும்ப நல மையமாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago