பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர் பைக் திருட்டு வழக்கில் மீண்டும் கைது

By செய்திப்பிரிவு

சங்கரன்கோவில் அருகே உள்ள சில்லிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (31). இவர், மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி முடித்து சாதாரண உடையில் ஊருக்குத் திரும்பிய ராமச்சந்திரன், சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில், நரிக்குறவர் இன பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதை தட்டிக் கேட்டவர்களிடம் தகராறு செய்துள்ளார். இதையடுத்து, ராமச்சந்திரனை பொதுமக்கள் பிடித்து, புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர், போலீஸ்காரர் என்பது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாக, விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற மதுரை கிளை, இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, சங்கரன்கோவில் டவுன் போலீஸார் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் புகார் வாங்கி, வழக்கு பதிவு செய்து, ராமச்சந்திரனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இருசக்கர வாகன திருட்டு வழக்கில் ராமச்சந்திரன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியகோவிலான்குளத்தைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர், தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதாக சின்ன கோவிலான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், போலீஸ்காரர் ராமச்சந்திரன் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர். போலீஸ்காரர் ராமச்சந்திரன் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்