பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் திருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சின்ன வெங்காயப் பயிர்களுக்கு நிவாரணத் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் நேற்று மனு அளித்தனர்.
இதுகுறித்து, ஆட்சியர் ப. வெங்கட பிரியாவிடம், தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில், "பெரம்பலூர் மாவட்டத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயப் பயிர்கள் திருகல் நோயால் பாதிக்கப்பட்டு, முற்றிலும் சேதமடைந்துள்ளன. விதை, உரம், சாகுபடி செலவு என ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் செலவிட்ட நிலையில், தோட்டக்கலைத் துறையினரால் பரிந்துரைக்கப்பட்ட பூச்சி மருந்து தெளித்தும் நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே, இந்நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண்துறை அலுவலர்கள் முறையாக கணக்கெடுத்து, பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு அரசின் நிவாரணத் தொகையை பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago