சென்னை - ரேணிகுண்டா வழித்தடத்தில் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதால், இந்த வழியாக செல்லும் முக்கிய விரைவு ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் தண்டவாளம் மேம்படுத்தப்பட்டுள்ள சென்னை - ரேணிகுண்டா வழித்தடத்தில் மணிக்கு 130 கி.மீ அதிவேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நேற்றுமுன்தினம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த பிரத்யேக சோதனை ஓட்டத்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம் வழியாக 24 நவீன பெட்டிகள் இணைக்கப்பட்ட பயணிகள் ரயிலை 130 கி.மீ வேகத்தில் இயக்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
வேகம் அதிகரிக்கப்படும்
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:தெற்கு ரயில்வேயில் ஏற்கெனவே இருக்கும் பெரும்பாலான வழித்தடங்களில் தண்டவாளங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தற்போது வழக்கமாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் மணிக்கு 105 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் ரயில்களின் வேகம் படிப்படியாக உயர்த்தப்படும்.
சென்னை - ரேணிகுண்டா தடத்தில் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் ரயில்கள் செல்லும் வகையில் நேற்று முன்தினம் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். எனவே, தமிழகத்தில் இருந்து இந்த வழித்தடத்தில் மும்பை, கொல்கத்தா, குவாஹாட்டி உட்பட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களின் வேகம் மணிக்கு 110 கி.மீ.ல் இருந்து 130 கி.மீ ஆக அதிகரித்து இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago