மாதாந்திர மின்வாரிய குறைதீர் கூட்டத்தை மீண்டும் நடத்த நுகர்வோர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மின்வாரியத்தின் சார்பில், தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதம்தோறும் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.

இக்கூட்டத்தில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மின்நுகர்வோர்கள் பங்கேற்று மின்கட்டணம், கூடுதல் மின்கட்டணம் வசூல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்து தெரிவிப்பார்கள். அதிகாரிகள் அந்த புகார்களை கேட்டு அதற்கு தீர்வு காண்பார்கள்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து குறைதீர் கூட்டம் நடத்துவதை மின்வாரியம் நிறுத்தியது.

இதுகுறித்து, நுகர்வோர்கள் கூறும்போது, “கடந்த மார்ச் மாதம் முதல் புதிய மின்இணைப்பு பெறுதல், மின்இணைப்பு பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் குறித்த காலத்துக்குள் செய்து தராமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. அத்துடன், தவறான மின்பயன்பாடு காரணமாக, அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட காரணங்களால் மின்நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பான புகார்கள் குறித்து மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளிக்க முடியாத நிலை உள்ளது. குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டால் அதிகாரிகளை நேரில் சந்தித்து குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம். எனவே, ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால், குறைதீர் கூட்டத்தை மின்வாரியம் மீண்டும் நடத்த வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்