குழந்தை தொழிலாளராக இருந்து மீட்கப்பட்டோருக்கு சிறப்பு பள்ளிகளில் 3 ஆண்டாக ஊக்கத்தொகை நிறுத்தம் தமிழகம் முழுவதும் 8,000 மாணவ, மாணவிகள் பாதிப்பு

By இ.மணிகண்டன்

தமிழகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு சிறப்புப் பள்ளிகளில் பயின்று வரும் 8 ஆயிரம் மாணவ, மாணவிகள் கடந்த 3 ஆண்டுகளாக ஊக்கத்தொகை கிடைக் காமல் சிரமப்படுகின்றனர்.

குடும்ப வறுமை காரணமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல், தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலைகள், செங்கல் சூளைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகளில் பணியாற்றி வரும் குழந்தைகளை மீட்டு கல்வி பயிற்றுவிக்க தேசிய குழந்தைத் தொழிலாளர் தடுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டம், தமிழகத்தில் சென்னை, கோவை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகர்கோவில், வேலூர், திருவண்ணா மலை, திருச்சி, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் இதுபோன்று மீட்கப்பட்ட 350 சிறுவர், சிறுமிகள், 13 சிறப்புப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.400, அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஆனால், 2018ம் ஆண்டு முதல் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையால் வழங்கப்பட்டு வந்த நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்கள் ஊக்கத்தொகை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.

இத்திட்டம் நடைமுறையில் உள்ள 15 மாவட்டங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் சிறப்புப் பள்ளிகளில் இருந்து விலகி மீண்டும் குழந்தை தொழிலாளர்களாக மாறும் நிலை உள்ளது. எனவே, உடனடியாக அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்