மாசிக் கொடைவிழா நிறைவடைந்த பின்னரும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் வந்து பொங்காலை வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடை விழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மார்ச் 8-ம் தேதி வரை நடைபெற்றது. கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், ஊரடங்கு தளர்வால் கடந்த இரண்டு ஆண்டுகளை விட திருவிழாவில் அதிகளவு பக்தர்கள் பங்கேற்றனர். கேரளாவில் இருந்து பெண் பக்தர்கள் இருமுடி கட்டிவந்து பகவதியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவிழா நிறைவடைந்துள்ள நிலையில் 8-ம் கொடை விழா நாளை நடைபெறுகிறது. அதேநேரம் திருவிழா முடிந்த பின்னரும் மண்டைக்காடுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளாவில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகை தந்த வகையில் உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று கேரள பக்தர்கள் அதிகமானோர் குடும்பத்துடன் வந்து பகவதியம்மனை வழிபட்டனர். திருவிழா போன்றே நேற்றும் மண்டைகாட்டில் கூட்டம் அதிகமாக இருந்தது. கோயில் வளாகம், சுற்றுப்புற பகுதிகள், கடற்கரை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கோயில் முன்பு உள்ள பொங்காலை பந்தலில் ஆயிரக்கணக்கான கேரள பெண் பக்தர்கள் பொங்காலை இட்டு வழிபாடு செய்தனர். கோயிலில் வழிபட்ட பின்னர் பக்தர்களில் பலர் கன்னியாகுமரி, திற்பரப்பு உட்பட இம்மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு சென்று மகிழ்ந்தனர். இதனால் நேற்று கன்னியாகுமரி சுற்றுலா மையங்களிலும் கூட்டம் அலைமோதியது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago