மதுரை மாநகராட்சியில் மேயர் வேட்பாளரை தேர்வு செய்வதில் திமுகவில் 2 அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர், மாவட்டச் செயலாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
மதுரை மாநகராட்சி தேர்தலில் மேயர், துணைமேயர், மண்டல தலைவர் பதவிகளை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் 20-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதுகுறித்து திமுக முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது: மேயர் வேட்பாளர் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், போட்டியிடுவோரில் மாவட்டச் செயலாளர், அமைச்சர்களுக்கு நெருக்கமாக உள்ள சிலரின் பெயர்கள் மட்டுமே பேசப் படுகிறது. கட்சியின் முக்கிய நிர்வாகி குடும்பத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட பொறுப்பாளருமான பொன் முத்துராமலிங்கத்தின் மரு மகள் விஜயமவுசுமி உள்ளார். மற்றவர்கள் பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் என்ற அளவில் உள்ளனர்.
மாநகராட்சியில் நேரடி அதி காரம் செலுத்தக் கூடியவராக இருப்பவர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். மாவட்ட செயலாளர் கோ.தளபதி தனது மகளுக்கு மேயர் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், பழனிவேல் தியாகராஜனின் முடிவுக்கு கட்டுப்படுவார். அமைச்சர் பி.மூர்த்தியின் முடிவுக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.மணிமாறன் ஒத்துப்போவார். 2 அமைச்சர்களும் பொன்.முத்துராமலிங்கம் மருமகளுக்கு ஆதரவு தருவார்களா என்பது சந்தேகமே. இதனை அவரும் அறிவார். இதனால் அவர் தனது செல்வாக்கை கட்சித் தலைமை மூலமே காட்ட முயல்வார்.
இதில், முதல்வரின் முடிவுதான் இறுதியாக இருக்கும். எனினும் 2 அமைச்சர்களும் ஒருமித்த கருத்துடன் ஒருவரை சிபாரிசு செய்தால் சிக்கல் ஏற்படலாம். அப்போது அமைச்சர்கள் சொல்லும் வேட்பாளரா, பொன்.முத்துராமலிங்கத்தின் மருமகளா என்ற கேள்விக்கு முதல்வர் மட்டுமே விடை காண முடியும். அப்போதும் ஜாதியை மையப்படுத்தி தாங்கள் நினைத்த வேட்பாளரை மேயராக்கிவிட மூவரும் நினைக்கின்றனர்.
குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும், இந்த சமுதாயத்தில் பலரும் பொறுப்புகளை வகிப்பதால் மாற்று சமூகத்தில் ஒருவர் மேயராக வாய்ப்பு அளிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. மேயர், துணை மேயர், 5 மண்டல தலைவர்கள் என 8 முக்கியப் பதவிகள் உள்ளன. மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களுக்கு தலா ஒரு மண்டல தலைவர் பதவி பெறும் வாய்ப்புள்ளது.
தேர்தல் முடிவுக்கு பின்னர் முதல்வர் முன்னிலையில் மட்டுமே மேயர் யார் என முடிவு எட்டப்படும். கட்சித் தலைமை எந்த முடிவை எடுத்தாலும் கட்டுப்படுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago