பசுமைப் போர்வை திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்குவதற்காக - வனத்துறையிடம் தயார் நிலையில் 3.43 லட்சம் மரக்கன்றுகள் : பெறுவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்ப்பு

By க.சக்திவேல்

தமிழகத்தின் பசுமைப் பரப்பு, வனப்பரப்பை அதிகரிக்க தமிழ்நாடு பண்ணை நிலங்களில் நீடித்த நிலைத்த பசுமை போர்வைத் திட்டத்தை (டிஎன்எம்எஸ்ஜிசிஎஃப்) முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் 16-ம் தேதி தொடங்கி வைத்தார். தமிழக வனத்துறையும், வேளாண்மை துறையும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. இத்திட்டத்தின்கீழ், கோவையில் வனத்துறை மூலம் மலைவேம்பு, தேக்கு, ஈட்டி, மகாகனி, நாவல், நெல்லி, செம்மரம், சந்தனம், வாகை, புளி, குமிழ், வேங்கை என மொத்தம் 3.43 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, இலவசமாக வழங்க தயார்நிலையில் உள்ளன. இருப்பினும், மரக்கன்றுகள் தேவையான விவசாயிகள் அவற்றை எளிதில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது.

இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறும்போது, “மரக்கன்றுகளைப் பெற ‘உழவன்’ செயலியில் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு, வட்டார வேளாண் உதவி அலுவலர்கள் அந்த விவரங்களை சரிபார்த்து, எங்கு மரக்கன்றுகளை நடப்போகிறார்கள் என்பதை கேட்டறிந்து அந்தநிலத்தை ஆய்வுசெய்து, புகைப்படத்துடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். அதைத்தொடர்ந்து வேளாண்மைத்துறை அலுவலரின் பரிந்துரை சீட்டு பெற வேண்டும். அதை கொண்டுசென்று வனத்துறையின் வன விரிவாக்க மைய நாற்றங்காலில் காண்பித்தால் மட்டுமே மரக்கன்றுகள் கிடைக்கும் நிலை உள்ளது. பருவ மழைக்காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே, நடைமுறையை எளிமைப்படுத்தி, விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் விரைந்து கிடைக்க வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

ஒருவாரத்தில் விநியோகம்

வேளாண் துறை அதிகாரிகள் கூறும்போது, “உற்பத்தி செய்யப்பட்டுள்ள 3.43 லட்சம் மரக்கன்றுகள், முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகிய திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட உள்ளன. சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, யார், யாருக்கு எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை கணக்கிட்டு, விவரங்களை சரிபார்த்த பின்னரே மரக்கன்றுகளை வழங்க வேண்டியுள்ளது. எனவேதான், உழவன் செயலியில் பதிவு செய்த உடனேயே மரக்கன்றுகளை பெற முடியாது. தற்போது விவசாயிகள் பலர் உழவன் செயலியில் பதிவு செய்து வருகின்றனர். இன்னும் ஒருவாரத்தில் அவர்களுக்கு மரக்கன்றுகள் விநியோகம் தொடங்கிவிடும். உழவன் செயலியில் பதிவு செய்து மரக்கன்றுகளை பெறுவதில் சிரமம் உள்ள விவசாயிகள், வட்டார வேளாண்மை உதவி அலுவர்கள், உதவி வேளாண் அலுவலர்களை தொடர்புகொள்ளலாம்” என்றனர்.

தொடர்பு எண்கள்

வனத்துறையினர் கூறும்போது, “வேளாண்துறையின் பரிந்துரை கிடைத்த பிறகு விவசாயிகள் மேட்டுப்பாளையம், ஓடந்துறை வனவியல் விரிவாக்க நாற்றங்கால் 9787237131, மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கு நாற்றங்கால், ஓடந்துறை வனச் சோதனைச்சாவடி 9443010826, மதுக்கரை வனவியல் விரிவாக்க நாற்றங்கால், சுந்தராபுரம் அருகில் 9080679611, போளுவாம்பட்டி வனச்சரக நாற்றங்கால், இருட்டுபள்ளம் 9443632026, வடகோவை வனக் கல்லூரி வளாக நாற்றங்கால் 7550156841 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தேவையான மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்