பிஏபி தண்ணீர் வரத்தால் நிரம்பிவரும் கோதவாடி குளம் :

By செய்திப்பிரிவு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள கோதவாடி குளம் 27 ஆண்டுகளுக்கு பின்னர் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிணத்துக்கடவு அருகேயுள்ள குருநல்லிபாளையம் கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் கோதவாடி குளம் அமைந்துள்ளது. இக்குளம் கடந்த 1994-ம் ஆண்டு பெய்த கனமழையால் நிறைந்து மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேறியது. அதன் பின்னர் குளத்தில் தண்ணீர் தேங்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக நீர் இன்றி குளம் வறண்டு காணப்படுகிறது.

இந்நிலையில், கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் குளம் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில், கடந்த ஒரு மாதத்துக்கு முன் விவசாயிகள், பாசன சங்கங்கள் ஆகியவற்றின் வேண்டுகோளை ஏற்று கோதவாடி குளத்துக்கு பிஏபி வாய்க்கால் வழியாக நீர் கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. செட்டிக்காபாளையம் பிஏபி கிளை கால்வாய் வழியாக நேரடியாக குளத்துக்கும், மெட்டுவாவி கிளை கால்வாய் வழியாக வடசித்தூர் ஆற்றிலும் நீர் திறக்கப்பட்டது. பல தடுப்பணைகள் நிரம்பிய பிறகு, கோதவாடி குளத்தை தண்ணீர் எட்டியது.

கடந்த வாரம், வடசித்தூர் ஆறு வழியாக பாய்ந்த நீர் நிறுத்தப்பட்ட நிலையில், இரு தினங்களுக்கு முன் மீண்டும் திறக்கப்பட்டது.

தற்போதைய நிலையில், தூர்வாரப்பட்ட பகுதியில் சுமார் 150 ஏக்கரில் 30 அடி உயரத்துக்கும், தெற்கு மற்றும் வடக்கு கரை பகுதியில், 10 அடி உயரத்துக்கும் தண்ணீர் தேங்கியுள்ளது. குளத்தின் நீர்மட்டம் தினமும் உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “குளத்துக்கு நீர் வரத்து இதே நிலையில் தொடர்ந்தால் இன்னும் ஒரு வாரத்தில், குளம் நிறைந்து, உபரிநீர் கோதவாடி ஆற்றில் செல்லும். குளத்தில் தேங்கும் நீரால், தெற்கு மற்றும் மேற்கு பகுதியிலுள்ள பாசன கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். இவ்வாண்டு பயிர் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்