கோவை மாநகரில் பாதாள சாக்கடை திட்டப் பணி நடைபெற்று வருகிறது. தெற்கு மண்டலத்துக்குட்பட்ட போத்தனூர், முத்தையா நகர் உள்ளிட்ட 14 வார்டுகளில் பாதாள சாக்கடைப் பணிகளை கடந்த செப்டம்பர் மாதமே முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனாலும் இதுவரை பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால் சாலைகள் சீரமைக்கப்படாமல் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, போத்தனூர் பகுதி பொதுமக்கள் கூறும்போது, “குறிப்பிட்ட காலத்தைத் தாண்டியும் பாதாள சாக்கடைப் பணிகள் இன்னும் நடக்கின் றன. இதனால் சாலைகள் முழுவதுமாக சீரமைக்கப் படவில்லை. பிரதான சாலைகளில் வாகனங்களில் செல்வதே பெரும் சிரமமாக உள்ளது” என்றனர்.
முத்தையா நகர் பகுதி பொதுமக்கள் கூறும்போது, “கரோனா ஊரடங்கு நாட்களில் இப்பணிகளை முடித்திருக்கலாம். ஆனால் துரிதமாக பணிகள் நடைபெறாததால் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. மழை பெய்தால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறோம்” என்றனர்.
இதுகுறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “கரோனா தொற்று பாதிப்பால் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. 14 வார்டுகளில் 435 கிலோ மீட்டர் தூரத்துக்கான பிரதான குழாய் மற்றும் இணைப்புக் குழாய்கள் பதிக்கும் பணியில் தற்போது வரை 237 கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago