திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பழுதான தங்கத்தேர் சீரமைக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த வெள்ளோட்டத்தை, தேரின்வடம்பிடித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் தங்கத்தேர் கடந்த 1972 -ம் ஆண்டு செய்யப்பட்டது. இந்தத் தங்கத்தேர் பல வருடங்களாக பக்தர்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்நிலையில் தேரின் மரபாகங்கள் பழுது அடைந்ததால் உற்சவம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. தங்கத் தேரில் உள்ள பழுதுகளை நீக்க ஏதுவாக கடந்த 23.03.2017 அன்று தங்கத் தேரில் குடைகலசம் முதல் சுவாமிபீடம் வரை உள்ள தங்கரேக் பதிக்கப்பட்ட செப்புத் தகடுகள் பிரிக்கப்பட்டன.
அதன்பிறகு எவ்வித பணிகளும் செய்யப்படாமல் இருந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு, இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கடந்த ஜூலை 2-ம் தேதி கோயிலில் மேற்கொண்ட ஆய்வின் போது, பழுதடைந்த தங்கத் தேரை சீரமைக்கும் பணிகளை மீண்டும் தொடங்கி, துரிதமாக முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
அதன்படி, புதிய மரத்தேர் உருவாக்கப்பட்டு, தங்கரேக் பதித்த செப்பு உலோகத் தகடுகள் பொருத்தும் பணி, மின் அலங்காரம் செய்யும் பணி, தங்கத்தேர் மண்டபத்துக்கான ரோலிங் சட்டர் சீரமைக்கும் பணி என, ரூ.11.58 லட்சம் மதிப்பில் உபயதாரர் மூலம் பணி மேற்கொள்ளப்பட்டு தங்கத்தேர் சீரமைக்கப்பட்டது.
அவ்வாறு சீரமைக்கப்பட்ட திருத்தணி சுப்பிரமணிய சுவாமிகோயில் தங்கத் தேரின் வெள்ளோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த வெள்ளோட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தேரின் வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.
மேலும், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 8 ஆண்டுகளாக பழுதாகி உள்ள வெள்ளித் தேருக்கு பதிலாக புதிய தேரை ரூ.18.30 லட்சம் மதிப்பில் தயார் செய்யும் பணியை நேற்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வுகளில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் ஜெயராமன், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago