கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில் 21,511 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.94.23 கோடி கடனுதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.
கிருஷ்ணகிரி தேவராஜ் மஹாலில் மாவட்டத்திலுள்ள 1,598 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 21,511 உறுப்பினர்களுக்கு ரூ.94.23 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, எம்எல்ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.மதியழகன் (பர்கூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் மேம்பாடு திட்ட இயக்குநர் ஈஸ்வரன் வரவேற்றார்.
இவ்விழாவில் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் பேசியதாவது:
கடந்த 1989-ம் ஆண்டு மகளிரின் முன்னேற்றத்துக்காக தருமபுரி மாவட்டத்தில் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு முதன் முதலாக சுயஉதவி குழுக்கள் தொடங்கப்பட்டன. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொலைநோக்கு பார்வையில் தொடக்கப்பட்ட இத்திட்டம் மூலம் மகளிர் சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைந்து வருகின்றனர், என்றார்.
இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் மலர்விழி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், முன்னாள் எம்பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், ஊராட்சித் தலைவர் ரஜினிசெல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரியில் ரூ.55.06 கோடி கடன்
தருமபுரியிலும் நேற்று மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவி மற்றும் நலத் திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அரசு கலைக் கல்லூரி கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். 645 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 8,385 உறுப்பினர்களுக்கு ரூ.55.06 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத் திட்டங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ-க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், மகளிர் திட்ட இயக்குநர் பாபு, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ராமதாஸ், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் மாலினி, உதவி ஆணையர் (கலால்) தணிகாசலம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் சாந்தி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அசோகன், அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago