வால்பாறையில் மனித- வன உயிரின மோதலை தடுக்க - தேயிலை எஸ்டேட் நிர்வாகத்தினருடன் வனத்துறையினர் ஆலோசனை :

வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச் சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மனித- வன உயிரின மோதல் சம்பவங்களை தடுக்கவும், காட்டு யானைகள் குடியிருப்புகளை சேதப்படுத்துவதை தவிர்க்கவும், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி வனக்கோட்ட துணை இயக்குநர் தலைமையில், உதவி வன பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் முன்னிலையில், வால்பாறை பகுதியில் உள்ள எஸ்டேட் நிர்வாகத்தினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அட்டகட்டியில் உள்ள வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து எஸ்டேட் மேலாளர்கள், உதவி மேலாளர்கள், மானாம்பள்ளி, வால்பாறை வனச்சரக அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எஸ்டேட் நிர்வாகத்துக்கு உட்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் நிர்வாக குடியிருப்புகளுக்கு வயது முதிர்ந்த நபர்களை பணி அமர்த்தக்கூடாது எனவும், பணி முடிந்து வீடு திரும்புபவர்களை இரவு நேரங்களில் பாதுகாப்பின்றி வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. எஸ்டேட் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு விளக்கு அமைக்கவும் தொழிலாளர்களின் குடியிருப்புகள் மற்றும் ரேஷன் கடைகளை சுற்றி சூரிய மின்வேலி அமைக்கவும் விவாதிக்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநரின் அறிவுரைப்படி, மொபைல் செயலி உருவாக்கப்பட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதை செயலியில் உடனடியாக பதிவிடும் பட்சத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மனித-வன உயிரின மோதல் நடைபெறும் பட்சத்தில் வனத்துறை மூலம் நிவாரண தொகை வழங்க ஏதுவாக தொடர்புடையவர்களிடம் உரிய ஆவணங்களை பெற்று வனச்சரக அலுவலகத்தில் காலதாமதமின்றி சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. மனித- வன உயிரின மோதல் தடுப்பு பணிகளில் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தினர் வனத்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE