கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்யக்கோரி சார் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு :

பொள்ளாச்சி: கிணத்துக்கடவில் செயல்பட்டுவரும் கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

கிணத்துக்கடவு பகுதியில் தேவராயபுரம், பெரிய கவுண்டனூர் மற்றும் நல்லிக்கவுண்டன் பாளையம் கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேவராயபுரம் பகுதியில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு உடைக்கப்படும் கற்கள் தினமும் 100-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கேரளா மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. கல்குவாரியில் தினமும் வெடி வைத்து பாறைகள் உடைக்கப்படுவதால் ஏற்படும் அதிர்வால், அருகில் உள்ள விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நீர்பாதைகள் அடைத்து, நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் விவசாய நிலங்களில் கால்நடைகளை கூட வளர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் குவாரியில் வெடி வைக்கும் பொழுது ஏற்படும் புகை மண்டலத்தால் காற்று மாசு ஏற்படுகிறது. குவாரியில் வெடி வைக்கும் போது கற்கள் சிதறி விவசாய நிலங்களில் விழுவதால் விவசாயப் பணிக்கு வர ஆட்கள் தயங்குகின்றனர். விவசாயத்தை மட்டும் நம்பி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்க கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE