கைத்தறி நெசவு பட்டுச் சேலைகளுக்கு - ஜிஎஸ்டி-யிலிருந்து முழு விலக்கு அளிக்க கோரிக்கை :

கைத்தறி நெசவு பட்டுச் சேலைளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை சிறுமுகை கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சிறுமுகையில் கைத்தறி பட்டுச் சேலை உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கத்தினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிறுமுகை பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கைத்தறி நெசவுத் தொழிலை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். சிறுமுகையில் தயாராகும் கைத்தறி மென்பட்டு உள்ளிட்ட பட்டுச் சேலை ரகங்கள் புகழ்பெற்றவை. மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் நெய்யப்பட்ட சிறுமுகை கைத்தறி பட்டுக்கு மத்திய, மாநில அரசுகளின் விருதுகள் கிடைத்துள்ளன.

இங்கு வாரம் ஒன்றுக்கு 15 ஆயிரம் வரை கைத்தறி பட்டுச் சேலைகள் வரை உற்பத்தி செய்யப்பட்டு, கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் துணி கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த சில வாரங்களாக கைத்தறி பட்டுச் சேலை தயாரிப்புக்கு தேவைப்படும் மூலப் பொருளான பட்டு நூல் விலையானது கடுமையாக உயர்ந்து உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பட்டுச் சேலைகள் மீதான மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு சுதந்திரம் பெற்றது முதல் உப்பை போன்று கைத்தறி தயாரிப்புக்கும் வரி விதிக்கபட்டதில்லை. கடந்த 2017-ம் ஆண்டு கைத்தறி பட்டுச் சேலைகளை ‘சில்க் பேப்ரிக்’ பிரிவில் சேர்த்து 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. ஏற்கெனவே நலிந்து வரும் கைத்தறி தொழிலை காப்பாற்றும் வகையில் கைத்தறி நெசவு பட்டுச் சேலைளுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டும். மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE