தக்காளி, கத்தரி, வெண்டை ஆகிய காய்கறிகளின் பண்ணை விலையை, வேளாண்மைப் பல்கலைக்கழகம் சந்தை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஏதுவாக கணிப்பு விலையை அறிவித்துள்ளது. இதுகுறித்து இப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய தோட்டக்கலை வாரியத்தின் 2-வது முன்கூட்டிய அறிக்கையின்படி, 2020-21-ம் ஆண்டு இந்தியாவில் தக்காளி 8.52 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 210.03 லட்சம் டன்கள் உற்பத்தியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும். தமிழகத்தில் ஆண்டு முழுவதும் தக்காளி முக்கிய பருவங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. கோவை, ஒட்டன்சத்திரம் சந்தைகளுக்கு நாச்சிப்பாளையம், முத்தம்பட்டி, செட்டிபாளையம், ஆலாந்துறை, உடுமலை, தாராபுரம், காவேரியம்மாபட்டி, கன்னிவாடி, மணப்பாறை ஆகிய பகுதிகளிலிருந்து தக்காளி வரத்து உள்ளது.
2020-21-ம் ஆண்டு இந்தியாவில் கத்தரி 7.58 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 131.54 லட்சம் டன்கள் உற்பத்தியாகும் என தேசிய தோட்டக்கலை வாரியத்தின் 2-வது முன்கூட்டிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்கள் கத்தரி பயிரிடுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. கோவை மொத்த சந்தைக்கு நாச்சிப்பாளையம், கேளம்பாளையம், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து கத்தரி வரத்துள்ளது.
அதேபோல், தேசிய தோட்டக்கலை வாரியத்தின் 2-வது முன்கூட்டிய அறிக்கையின்படி, 2020-21-ம் ஆண்டு இந்தியாவில் வெண்டை 5.11 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 62.19 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் சேலம், தேனி, தருமபுரி, திருவள்ளூர், கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் வெண்டை அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கோவை சந்தைக்கு திருச்சி, தலைவாசல், வைகுண்டம், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளிலிருந்து வெண்டை வரத்தானது அதிகளவு காணப்படுகிறது.
இந்தச்சூழலில், விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயங்கி வரும், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், ஒட்டன்சத்திரம் சந்தையில் கடந்த 14 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்தரி, வெண்டை விலை குறித்து ஆய்வுகள் மேற்கொண்டது. அதன் முடிவுகளின்படி, அறுவடையின் போது தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.35 முதல் ரூ.40 வரையும், கத்தரியின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.25 முதல் ரூ.27 வரையும், வெண்டையின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.22 வரை இருக்கும் என்று அறியப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago