கோவை மாவட்டத்தில் - டெங்கு காய்ச்சல் பரவல் : தடுப்புப் பணிகள் தீவிரம் :

கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க, மாநகரில் மாநகராட்சி நிர்வாகத்தினரும், புறநகரில் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்தினரும் சுகாதாரத்துறையினருடன் இணைந்து நோய் தடுப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவையில் டெங்கு காய்ச்சலால் அவ்வப்போது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மாநகராட்சிப் பகுதியில் ஒரு வார்டுக்கு 10 பேர் என 100 வார்டுகளுக்கு, மொத்தம் ஆயிரம் ஊழியர்கள் பிரத்யேகமாக இப்பணிக்காக ஒதுக்கப்பட்டு, டெங்கு பரவல் தடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில், ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் தலா 20 பேர் நியமிக்கப்பட்டு, ஊராட்சிப் பகுதிளில் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல், மாவட்டத்தில் 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரத்யேகமாக ஊழியர்கள் ஒதுக்கப்பட்டு, தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்தினர் கூறும்போது, ‘‘ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவர். வீடுகளில் தண்ணீர் தேங்கும் வகையில் காணப்படும் பழைய டயர்கள், தேங்காய் மட்டைகள் போன்றவற்றை அகற்றுவர். அதேபோல், நன்னீரில் அபேட் மருந்து தெளித்தல், சாக்கடைகள், கழிவுநீர் செல்லும் பகுதிகள், சுகாதாரமற்று காணப்படும் இடங்களில் கொசு மருந்து தெளித்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE