தொழிற்பேட்டைகளில் நிலத்தின் விலை குறைப்பு : இந்தியத் தொழில் வர்த்தக சபை வரவேற்பு

சிட்கோ தொழிற்பேட்டைகளில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலத்தின் விலையைக் குறைத்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக முதல்வருக்கு இந்தியத் தொழில் வர்த்தக சபையின் (கோவை கிளை) தலைவர் பாலசுப்பிரமணியம் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள நிலங்களை, அந்தந்த தொழிற்பேட்டைகளின் சூழலுக்கு ஏற்ப 5 முதல் 75 சதவீதம் வரை விலையைக் குறைத்து தொழில் நிறுவனங்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வரின் நடவடிக்கை வரவேற்புக்குரியது. இதன் மூலமாக புதிய தொழில் முனைவோர் மற்றும் பிற தொழில் துறையினர் புதிதாக தொழில் தொடங்க எளிதாக நிலம் வாங்க முடியும். மாநிலத்தில் தொழில் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வரும் 2030-ம் ஆண்டுக்குள் தமிழகம் ஒரு டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உருவாக வேண்டும் என்ற இலக்கை அடைய இதுபோன்ற நடவடிக்கைகள் நிச்சயமாக உதவும். தமிழக சிட்கோ தொழிற்பேட்டைகளில் இந்தளவுக்கு நிலத்தின் விலையைக் குறைத்து அரசு அறிவிப்பது கடந்த 50 ஆண்டுகளில் இதுவே முதல் முறை ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE