ஈரோடு கோட்டை பெருமாள் கோயிலில் 14-ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படும்போது, பக்தர்களுக்கு அனுமதியில்லை என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 4-ம் தேதி தொடங்கியது. வரும் 13-ம் தேதி வரை பகல் பத்து உற்ஸவம் நடைபெற உள்ளது. அன்று மாலை 5 மணிக்கு கஸ்தூரி அரங்கநாதர் சுவாமி மோகினி அலங்கார சேவை நடைபெறும். கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக அப்போது பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 14-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம் பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கோயில் பணியாளர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்றும், சொர்க்க வாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சுவாமி தரிசனத்திற்கும், சொர்க்கவாசல் வழியாகச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை இராபத்து உற்ஸவம் மற்றும் முத்தங்கி சேவை நடைபெறுகிறது. 23-ம் தேதி இரவு 7 மணிக்கு நம்மாழ்வார் மோட்சம், திருவாசல் சாற்று முறை நடைபெறுகிறது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago