மனித உரிமைகள் தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சாதி, மதம், இனம், நிறம்,பாலினம் மற்றும் பிறப்பு அடிப்படையிலான எவ்விதப் பாகுபாடுமின்றி, அனைத்து மக்களுக்குமான அடிப்படை உரிமைகளும், அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே மனித உரிமைத் தத்துவமாகும்.
கடந்த 1948-ல் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஐக்கிய நாடுகளின் பொது அவை ஏற்றுக் கொண்டதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் டிச. 10-ம் தேதி உலகமனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
நம்மிடம் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதேபோல நாம் மற்றவர்களிடமும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே மனித உரிமையின் அடிப்படைத் தத்துவமாகும்.
அவ்வகையில் ‘அனைவரும் மனிதர்கள்; அனைவரும் சரிசமம்’ என்பதை இந்த ஆண்டுக்கான மனித உரிமைகள் தின முழக்கமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதைத்தான் 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும், யாவரும் கேளிர் என்றும் தமிழ் நிலம் தாங்கி நின்றது. இதைத்தான் சுயமரியாதை எனும் பெயரில் இந்த தமிழ் மண் அரசியல், சமூக, பண்பாட்டுத் தளத்தில் தொடர்ந்து வளர்த்து வந்துள்ளது.
அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டவும், ஒவ்வொருவரின் சுய மரியாதையைப் பாதுகாக்கவும் இந்த மனித உரிமைகள் நாளில் உறுதியேற்போம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago