திருச்செங்கோடு அருகே ஊராட்சித் தலைவியைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலைமறியல் போராட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பிருதி ஊராட்சித் தலைவி பாக்கியம். இவரது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், நில அளவைப் பணியைப் பார்வையிடச் சென்றபோது ஏற்பட்ட தகராறில், பாக்கியத்தை 3 பேர் தாக்கியுள்ளனர். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாக்கியம், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஊராட்சித் தலைவியைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்து திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு மற்றும் திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சார்பில், பரமத்திவேலூர் சாலையில் நேற்று சாலை மறியல் நடந்தது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உறுதியளித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதுகுறித்து ஒன்றியக் குழு உறுப்பினர் செல்வராஜ், திருச்செங்கோடு ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் அருண் குமார் ஆகியோர் கூறும்போது, ஊராட்சித் தலைவி பாக்கியத்தைத் தாக்கியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago