கோவை: கோவையில் புதிதாக தொழிற்பேட்டைகளை உருவாக்கி, தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் நிலம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொடிசியா சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றாக ஊத்தங்கரை, கும்பகோணம், காரைக்குடி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் மனைகளின் விலை மதிப்பை குறைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு கோவை கொடிசியா அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு, இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் கூறியதாவது:
சிட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் மனைகளின் விலை மதிப்பைக் குறைத்து, தொழில் நிறுவனங்களுக்கு வழங்குவது வரவேற்புக்குரியது. இதன் மூலமாக புதிதாக தொழில் நிறுவனங்கள் உருவாவதை ஊக்கப்படுத்த முடியும். வேலைவாய்ப்புகளும் உருவாகும்.கோவை மாவட்டத்தை பொறுத்தவரை குறிச்சி மற்றும் மலுமிச்சம்பட்டி பகுதிகளில் தொழிற்பேட்டைகள் உள்ளன. இவற்றில் உள்ள நிலங்கள் ஏற்கெனவே தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டன. தற்போதைய சூழலில் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு அதிகளவில் நிலத்துக்கான தேவை உள்ளது. தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க ஏதுவாக புதிதாக தொழிற்பேட்டைகளை தமிழக அரசு உருவாக்கி, குறைந்த விலையில் நிலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago