பள்ளி மாணவர்களை அரசு பேருந்துகளில் ஏற்றி, இறக்குவதில் அலட்சியம் : போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பள்ளி மாணவ, மாணவிகளை அரசு பேருந்துகளில் ஏற்றி, இறக்குவதில் அலட்சியம் காட்டும் ஓட்டுநர், நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கரோனா தொற்று பரவல் குறைந்ததைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசு சார்பில், ஒவ்வோர் ஆண்டும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படுகிறது. இந்நிலையில், பேருந்துகளில் மாணவ, மாணவிகளை ஏற்றி, இறக்க அரசு பேருந்துகளின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அலட்சியம் காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

சமீபத்தில், குனியமுத்தூர் பி.கே.புதூரில் அரசு பேருந்தில் பயணித்த கார்த்திகேஷ்வரன்(15) என்ற 10-ம் வகுப்பு மாணவர், கீழே இறங்குவதற்குள் பேருந்தை இயக்கியதால், மாணவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து, ஓட்டுநர், நடத்துநர் மீது இரு பிரிவுகளின் கீழ் மாநகர் மேற்கு புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொதுமக்கள் கூறும்போது, ‘‘சில அரசு பேருந்துகளின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பள்ளி மாணவர்களை பேருந்துகளில் ஏற்றுவதில்லை. மாணவர்களுக்கு பதில் பொதுமக்களை ஏற்றிச் சென்றால் உரிய வருவாய் கிடைக்குமே என்பதே அவர்களின் அலட்சியத்துக்கு காரணம். காலையில் உரிய நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்துவதில்லை. சிறிது தூரம் தள்ளி நிறுத்துகின்றனர். இதனால் மாணவ, மாணவிகள் தங்களது புத்தக பையை சுமந்து கொண்டு, மூச்சிறைக்க ஓடிச் சென்று ஏற வேண்டியுள்ளது. மாலை நேரங்களில் மாணவர்கள் இறங்கி விட்டனரா என்று கூட பார்க்காமல் பேருந்துகளை இயக்க முற்படுகின்றனர். இதனால் விபத்துகள் நடக்கின்றன. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக, அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறும்போது, “உரிய பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி மாணவர்களை ஏற்றிச் செல்லுமாறு ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். கூட்டமாக பேருந்தை நோக்கி மாணவர்கள் ஓடிவரும்போது ஓட்டுநர்கள் முன்பே நிறுத்திவிடுகின்றனர். அல்லது தள்ளி நிறுத்த வேண்டிய சூழல் உள்ளது. எனவே, பள்ளிகள் தரப்பில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாணவர்களை வரிசையில் ஒழுங்குபடுத்தி ஏற்றிச்செல்ல ஆசிரியர்கள் உதவ வேண்டும். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE