மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் - 12 வயது சிறுமிக்கு கணையபிளவு அறுவை சிகிச்சை :

By செய்திப்பிரிவு

கோவை அன்னூர் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த, ஆனந்தகுமார்-குணலட்சுமி தம்பதியின் மகள் அனு (12). 6 -ம் வகுப்புபடித்து வருகிறார். அடிக்கடி வயிற்று வலி, வாந்தியால் அவதிப்பட்டு வந்த அனுயை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சிறுமியை பரிசோதனை செய்ததில் கணையத்தில் பிறவிக் கோளாறு இருப்பதும், கணையத்தில் 2 குழாய்கள் இருப்பதும் தெரியவந்தது. பிளவுபட்ட கணையத்தில் உள்ள முக்கிய குழாயிலிருந்து கணையநீர் குடலுக்கு செல்ல முடியாமல், அதன் தலைப்பகுதி பழுதடைந்து கற்கள் உருவாகி அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவஅலுவலர் கண்ணன், குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் விஜயகிரி, கல்லீரல், குடல் அறுவை சிசிச்சை நிபுணர் ஆனந்த்பரதன் ஆகியோர் ஆலோசனை நடத்தி சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டனர். பின்னர், வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது சிறுமி உடல் நலமுடன் உள்ளார்.

இதுதொடர்பாக டாக்டர் கண்ணன் கூறும்போது, "கணையத்தின் பழுதடைந்த தலைப்பகுதியை அகற்றிவிட்டு கணைய குழாய்க்குள் இருந்த 15கற்களை அகற்றி, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 4 மணி நேரம் இந்தஅறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பெரிய தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் சிக்கலான அறுவை சிகிச்சை இங்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளியில் இந்த சிகிச்சை பெற சுமார் ரூ.3.50 லட்சம்வரை செலவாகும். முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இங்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. உடலில் முக்கியமான உறுப்பு கணையம். அது பாதிக்கப்படும்போது சர்க்கரைநோய், அஜீரணக் கோளாறு, உடல் வளர்ச்சி பாதிப்பு ஆகியவை ஏற்படும்"என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்