சேலம் மாவட்டத்தில் 11-ம் தேதி மக்கள் நீதிமன்றம் : வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில், வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணக்கூடிய மக்கள் நீதிமன்றம் வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக, சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குமரகுரு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல்படி, சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர் மற்றும் ஓமலூர் நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது.

மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன்றங்களில் ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் வழக்குகளில், சமரசம் செய்துக் கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கிக் கடன்கள் மற்றும் கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காணப்படும்.

மேலும், தொழிலாளர் (நிலம் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் நிலம், சொத்து, பாக பிரிவினை வாடகை விவகாரங்கள்), விற்பனை வரி, வருமான வரி சொத்து வரி பிரச்சினைகள் குறித்த வழக்குகளிலும் மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காண முடியும்.

வழக்குகளை மக்கள் நீதிமன்றத்தில் பேச்சு வார்த்தைகள் மூலம் சமரச முறையில் தீர்வு காணப்படுவதால் யார் வென்றவர் தோற்றவர் என்ற பாகுபாடு இன்றியும் உறவு முறைகள் தொடர்ந்து நீடிக்கவும் மக்கள் நீதிமன்றம் வழி வகை செய்கிறது. மக்கள் நீதிமன்றம் மூலமாக முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி கொடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. வரும் 11-ம் தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள மக்கள் நீதிமன்றத்தை மக்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வழக்குகளுக்கு விரைவாகவும், சமரச முறையிலும் தீர்வு காணலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்