சேலம் அருகே ஆத்தூரில் விவசாயியை கொலை செய்து புதைத்த வழக்கில் போலீஸார் உடலை கண்டு பிடித்த நிலையில், மண்டை ஓட்டை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாகவுண்டம்பட்டியைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி (74). திருமணம் ஆகாதவர். இவர் கடந்த மார்ச் 23-ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து அவரது தம்பி மகள் கனகா சென்னை உயர் நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சுப்பிரமணியை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூரில் சுப்பிரமணிக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை வாங்குவது சம்பந்தமாக, ஆத்தூரைச் சேர்ந்த பெருமாள் (55), அவரது நண்பர்கள் ராமதாஸ் (27), அறிவழகன், சக்திவேல் உள்ளிட்ட 6 பேர் சுப்பிரமணியைக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, ஆத்தூர் போலீஸாருக்கு விவசாயி சுப்பிரமணி வழக்கு மாற்றப்பட்டது.
ஆத்தூர் போலீஸார் அறிவழகன், ராமதாஸை கைது செய்து விசாரித்தனர். இதில், சக்திவேலுக்கு சொந்தமான தோட்டத்தில் சுப்பிரமணி உடலை புதைத்ததாக தெரிவித்ததையடுத்து அங்கு தேடினர். ஆனால் அங்கு உடல் கிடைக்கவில்லை.
இதனிடையே வழக்கில் தொடர்புடைய தினேஷ், முஸ்தபா ஆகியோர் சரணடைந்தனர். மேலும், பெருமாள், சக்திவேல் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், சக்திவேல் தோட்டத்தில் சுப்பிரமணியத்தைக் கொன்று 6 பேரும் புதைத்துள்ளதாக கூறினர்.
பின்னர், பெருமாளும், சக்திவேலும் மற்ற நால்வருக்கும் தெரியாமல், சுப்பிரமணியத்தின் உடலை தோண்டி, வேறு இடத்தில் புதைத்துள்ளனர். அங்கும் போலீஸார் கண்டு பிடித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் மீண்டும் சுப்பிரமணி சடலத்தை தோண்டி சக்திவேல் தோட்டக் கிணற்றில் சிறிதும், ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் வசிஷ்டநதியிலும் வீசியது தெரிந்தது.
வசிஷ்டநதி கரையோரத்தில் எலும்பு கூடாக உடல் மீட்கப்பட்ட நிலையில், மண்டை ஓடு இல்லாததால், கொலை செய்யப்பட்டது சுப்பிரமணி என்பதை உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மண்டை ஓட்டை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago