தற்காலிக சுகாதார ஆய்வாளர் பணிக்கு 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு :

By செய்திப்பிரிவு

சேலம்: ‘‘சேலத்தில் தற்காலிக சுகாதார ஆய்வாளர் பணிக்கு வரும் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்,’ என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நலவாழ்வு மையங்களில் உள்ள பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்), சுகாதார ஆய்வாளர் நிலை 2 மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் சேலம் மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் 99 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் (ஆண்), சுகாதார ஆய்வாளர்கள் (Gr-II) 99 பேர், துணை சுகாதார நல வாழ்வு மையங்களிலும் மற்றும் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறைக்கு 245 இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள், துணை சுகாதார நலவாழ்வு மையத்துக்கு ஒருவர் என்ற விகிதத்தில் ஒப்பந்த முறையில் பணியமர்த்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு மற்றும் சேலம் மாவட்ட வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கரோனா தொற்று காலத்தில் பணிபுரிந்த சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்களின் பணியினை கருத்தில் கொண்டு மாவட்ட நலவாழ்வு சங்கங்களின் வாயிலாக தேர்வு நடைபெறும் போது, கரோனா பெருந்தொற்று காலத்தில் இவர்கள் பணிபுரிந்தமைக்கான முன்னுரிமை அளிக்கப்பட்டு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE