தி.மலை மாவட்ட குறைதீர்வு கூட்டத்தில் - வீட்டு மனை பட்டா வழங்க இருளர்கள் கோரிக்கை : ஆட்சியர் பா.முருகேஷிடம் மனு அளித்தனர்

திருவண்ணாமலை அருகே நார்த்தாம்பூண்டியில் வசிக்கும் பழங்குடி இருளர்கள், வீட்டு மனை பட்டா கேட்டு ஆட்சியர் பா.முருகேஷிடம் நேற்று மனு அளித்துள்ளனர்.

தி.மலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு, கடந்த இரண்டு வாரங்களாக கனமழை காரணமாக மக்களின் வருகை குறைந்திருந்தது. இந்நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு, மக்களின் வருகை நேற்று திடீரென அதிகரித்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து, மனுக்களை பதிவு செய்து, அதன்பிறகு ஆட்சியர் பா.முருகேஷிடன் கோரிக்கை மனுக்களை பொது மக்கள் அளித்தனர்.

திருவண்ணாமலை அடுத்த நார்த்தாம்பூண்டி கிராமம் அண்ணாநகரில் வசிக்கும் பழங்குடி இருளர் குடும்பத்தினர், வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளித்துள்ளனர். பின்னர் அவர்கள் கூறும்போது, “அண்ணா நகர் பகுதியில், கடந்த 40 ஆண்டுகளாக 30 குடும்பங்கள் வசிக்கிறோம். நாங்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்க வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதி எனக்கூறி, இடத்தை காலி செய்ய அதிகாரிகள் கூறி வருகின்றனர். எங்களுக்கு மாற்று இடத்தை தேர்வு செய்து பட்டா வழங்க வேண்டும். தி.மலை மாவட்டத்தில் எந்த ஊரில் பட்டா கொடுத்தாலும், நாங்கள் செல்வதற்கு தயாராக உள்ளோம். எங்களது அடுத்த தலைமுறையினர் நிலையான இடத்தில் தங்கி கல்வி கற்க வேண்டும். அதற்கு அதிகாரிகள் உதவி புரிய வேண்டும்” என்றனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த முகமது நதீம் என்பவர் அளித்துள்ள மனுவில், “தமிழ்நாடு அரசு பணி, தமிழக மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. போட்டித் தேர்வுக்கு தமிழ் மொழியை தகுதி தேர்வாக அறிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

அதே நேரத்தில் வரும் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ள தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கு, புதிய அரசாணை பொருந்தாது என்பது வேதனை அளிக்கிறது. 2017-ல் நடைபெற்ற தேர்வில், தமிழகத்தை சேராதவர்கள் அதிகளவில் இடம்பெற்றிருந்தார்கள். எனவே, நடைபெற உள்ள தேர்வில், தமிழ்மொழியை தகுதி தேர்வாக அறிவிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE