திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று காலை முதல் மாலை வரை கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனாவை தடுக்க 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி கள் செலுத்தப்பட்டு வருகின்றன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தகுதியுள்ளவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் இதுவரை முதல் தவணையாக 6 லட்சத்து 20 ஆயிரத்து 854 நபர்களும், 2-ம் தவணையாக 3 லட்சத்து 27 ஆயிரத்து 487 நபர்கள் என மொத்தம் 9 லட்சத்து 44 ஆயிரத்து 700 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தற்போது, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் உருமாறிய கரோனா வேகமாக பரவி வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் பொது இடங்களில் கூடும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடை வெளியை பின்பற்ற வேண்டும். வேலை செய்யும் இடங்கள், தொழிற்சாலைகளில் தனி மனித இடைவெளி அவசியம். அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். காய்ச்சல், சளி தொந்தரவு இருந்தால் உடனடியாக மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும்.
100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாவட்டமாக திருப் பத்தூர் மாவட்டத்தை மாற்ற பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்நிலையில், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று (7-ம் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அச்சமங்கலம், அகரம், அனேரி, ஆண்டியப்பூர், அண்ணாண்டப்பட்டி, பொம்மிக்குப்பம், சின்னசமுத்திரம், இருணாப்பட்டு, ஜம்மணபுதூர், கதிரம்பட்டி, பூரிகாமணிமிட்டா ஆகிய 11 ஊராட்சிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இதற்காக, 137 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்டபவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்’’என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago