உடுமலை, வால்பாறையில் இருந்து கேரளாவுக்கு பேருந்துகள் இயக்கம் :

உடுமலை / பொள்ளாச்சி: உடுமலையில் இருந்து நேரடியாகவும், கோவையில் இருந்து உடுமலை வழியாகவும் கேரள மாநிலம் மூணாறு, மறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா அச்சம் காரணமாக இரு மாநிலங்களுக்கு இடையேயான அரசுப் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்பும்கூட இரு மாநிலங்களுக்கு இடையே அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழக அரசு உத்தரவின்பேரில் உடுமலை கிளையில் இருந்து கேரளாவுக்கு பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து துறையினர் கூறும்போது, ‘‘கரோனா பரவல் காரணமாக 18 மாத இடைவெளிக்குப் பின்பு கேரளாவுக்கு தமிழக அரசுப் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 6.30 மணிக்கு உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும், காலை 11. 30 மணிக்கு மூணாறில் இருந்து உடுமலைக்கும் பேருந்துகள் இயக்கப்படும்,’’ என்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து சோலையாறு அணை, மளுக்கப்பாறை, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வழியாக கேரள மாநிலம் சாலக்குடிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சாலக்குடியில் இருந்து மளுக்கப்பாறை வரை, தினமும் ஐந்து முறை கேரளா பேருந்து இயக்கப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வால்பாறை - சாலக்குடி இடையே பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் வால்பாறையில் இருந்து சாலக்குடிக்கு தனியார் பேருந்து இயக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் பேருந்து சேவை தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE