கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஒமைக்ரான் சிகிச்சையளிக்க 30 படுக்கைகள் கொண்ட வார்டு தொடங்கப்பட்டு உள்ளதாக முதல்வர் அசோகன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து கர்நாடகாவை ஒட்டியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது. அரசின் வழிக்காட்டுதலின்படி வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தப்பட்டு ஒமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
தடுப்பூசி அறிவுரை
மாவட்டத்தில் 4.20 லட்சம் பேர் கரோனா தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் வெளி நோயாளிகளில் தடுப்பூசி செலுத்த வருபவர்களுக்கு தனிவரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் ஆலோசனை வழங்கி தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒமைக்ரான் வைரஸால் பாதிப்பு அடைந்தாலும் ஆக்சிஜன் தேவையோ, உயிரிழப்புகளோ இல்லாமல் தடுக்கலாம். கிருஷ்ணகிரி மருத்துவமனையில் தற்போது 100 படுக்கைகள் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது 20 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிப்பு குறைவு
தினமும் 600 பேருக்கு மேல் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் தொற்றுக்கு பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 10-க்கும் கீழ் தான் உள்ளது. புதிய வகை வைரசைக் கண்டு பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago