மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்கிறதா என கண்காணிக்க உத்தரவு :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13.83 லட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து ஆட்சியர் பேசியதாவது: மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 42,685 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் சரியாக சென்று அடைகிறதா என்பதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாற்றுத்திறனாளிகள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர்.பரமசிவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தர்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டையில் உள்ள அதியமான்கோட்டத்தில் நேற்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினம்-2021 நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 10 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 2 மாற்றுத் திறனாளிகளுக்கு வீடியோ உருபெருக்கியையும் வழங்கினார். மேலும், மாற்றுத் திறனாளிகள் தினத்தை ஒட்டி நடந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து, மாற்றுத் திறன் கொண்ட மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை முடநீக்கியல் வல்லுநர் விஜயபாஸ்கர், அதியமான்கோட்டை ஊராட்சித் தலைவர் மாரியம்மாள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE