கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்க வேண்டும் : கரும்பு விவசாயிகள் சங்கம் மனு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில், ‘தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. ஆலையின் சுற்று வட்டாரத்தில் உள்ள பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம் உள்ளிட்ட வட்டங்களில் சாகுபடி யாகும் கரும்பு இந்த சர்க்கரை ஆலையின் மூலம் அரைக்கப்படும்.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கரும்பு வரத்து குறைந்ததால் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை மேற்கொள்ளப்படுவதில்லை. நடப்பு ஆண்டில் ஆலையின் சாகுபடி பரப்பு பகுதிகளில் போதிய மழை பெய்ததால் ஓரளவு கரும்பு சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகளை பாதுகாத்து அவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நடப்பு ஆண்டில் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை மேற்கொள்ள வேண்டும். அரவை தொடங்க வேண்டுமெனில் ஆலை வளாகத்தில் முன் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இப் பணிகளை உடனே தொடங்க வேண்டும்.

மேலும், ஆலையில் தொடங்கப்பட்ட மின் உற்பத்தி திட்ட பணிகளை முடித்து அந்த திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE