விளைப் பொருட்களுக்கான விலை நிர்ணயம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் வெளிநடப்பு :

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கான விலை நிர்ணயிப்பது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்புக் கூட்டம் ஆண்டுக்கு ஒரு முறை தருமபுரியில் நடந்து வந்தது. இந்நிலையில், முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் இக்கூட்டம் நேற்று மாலை 4 மணிக்கு நடந்தது. இக்கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதில், குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு மட்டும் நிகழ்ச்சி நிரல் நகல் வழங்கப்பட்டதால், தமிழக விவசாயிகள் சங்கத் தின் மாநில செயலாளர் கே.வி.சின்னசாமி தலைமை யிலான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, விலை நிர்ணயம் குறித்து எப்படி கேள்வி கேட்பது என அதிகாரிகளிடம் கேட்டனர். இதற்கு அதிகாரிகள் 37 பேர் மட்டுமே கமிட்டியில் உள்ளனர்.

அதில் 13 பேருக்கு மட்டுமே நிகழ்ச்சி நிரல் நகல் வழங்கப்படும். விருப்பம் இருந்தால் உள்ளே இருங்கள், இல்லையென்றால் வெளியேறுங்கள் என அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளியேறினர். இதுகுறித்து மாநில செயலாளர் கூறுகையில், விவசாயிகளை அழைத்துவிட்டு அதிகாரிகள் அவமானப்படுத்துகின்றனர். ஒரு சிலருக்கு மட்டும் நிகழ்ச்சி நிரல் நகல் என்றால், எதற்கு மற்ற விவசாயிகளை அழைக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE