சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ளசிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பட்டா வழங்க தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட செயலாக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவன பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், துறையின் செயலர் வி.அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:
சிட்கோ மூலம் ஏற்கெனவே 122தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் ஒரே சீரான தொழில் வளர்ச்சியை கொண்டுவர ஏதுவாக, இந்த அரசு பொறுப்பேற்றவுடன் திருவள்ளுர், செங்கல்பட்டு, திருச்சி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 413 ஏக்கரில் ரூ.241 கோடியில் மேலும் 5 புதிய தொழிற்பேட்டைகள், கோயம்புத்தூரில் ரூ.35.63 கோடி மதிப்பில் 50 விழுக்காடு அரசு மானியத்துடன் புதிய தனியார் தொழிற்பேட்டை உருவாக்கும் பணிகளை விரைவுபடுத்த மாவட்டஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு நில வகைப்பாட்டினால் பட்டா வழங்க இயலாமல் உள்ள சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள நில பிரச்சினைகளை விரைந்து தீர்க்கும் வகையில் தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட செயலாக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் 19 ஏக்கர்பரப்பில் ரூ.23 கோடியில் சிற்பக் கலைஞர் தொழிற்பூங்கா, கோயம்புத்தூரில் செல்வம்பாளையம், செங்கல்பட்டில் கொடூர், மதுரை சக்கிமங்கலம் ஆகிய பகுதிகளில் தொடங்கப்பட உள்ள புதிய தொழிற்பேட்டைகளுக்கு மாவட்ட ஆட்சியர்களின் முன்மொழிவு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை உடனடியாக தயாரித்து அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது உற்பத்தி கட்டமைப்பு திட்டத்தின்கீழ், கோயம்புத்தூர்- வெள்ளாலூர், மதுக்கரை, வேலூர் - குடியாத்தம் ஆகிய 3 இடங்களில் பொது வசதி மையங்கள் அமைக்கநிதி ஒதுக்கப்பட்டு, பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்குவதற்கு குறைந்த வாடகையில் அம்பத்தூர், கோயம்புத்தூர் தொழிற்பேட்டையில் குடியிருப்புகள் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago