சிவகங்கை அருகே ஏரா ளமானோர் சிறுநீரகம் பாதித்த கிராமத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவ முகாம் நடத்தினர்.
சிவகங்கை அருகே கீழப் பூங்குடி ஊராட்சி வீரப்பட்டியில் 350 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் விவசாயிகளாகவும், கூலித்தொழிலாளர்களாகவும் உள்ளனர். இக்கிராமத்துக்கு அருகேயுள்ள கண்மாயில் ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அந்நீர் உவர்ப்பாக உள்ளது.
இந்நிலையில் அக்கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்டோர் சிறுநீரக பாதிப்பால் இறந்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் சிலருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலருக்கு சிறுநீரக கல் பிரச்சினையும் உள்ளது. இதற்கு தீர்வின்றி கிராம மக்கள் தவித்து வந்தனர்.
இதுகுறித்து இந்து தமிழ் திசை நாளிதழில் நவ.29-ல் செய்தி வெளியானது. இதையடுத்து ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உத்தரவுப்படி வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி தலைமையிலான மருத்துவர்கள் வீரப்பட்டி கிராமத் தில் தண்ணீரை சோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
மேலும் நேற்று சிறுநீரக பாதிப்பு குறித்து அறிய கிராமத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் கிராமத்தில் இருந்த 500 பேருக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டன. விரைவில் பரிசோதனை முடிவு வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago