வைகையாற்று வெள்ளத்தால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. ராமநாதபுரம்-நயினார்கோவில் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர், ராம நாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் மதகு அணைக்கு 10,200 கன அடியாக வந்து கொண்டிக்கிறது. இந்த மதகு அணையில் இருந்து வைகை வலது, இடது பிரதானக் கால்வாய்கள், பரளையாறு மூலம் நூற்றுக்கணக்கான கண்மாய் களுக்கு தண்ணீர் செல்கிறது.
மீதமுள்ள 8 ஆயிரம் கன அடி வைகையாற்றில் விடப்பட்டு ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வருகிறது. அதிக அளவில் தண்ணீர் வருவதால் ஆர்.காவனூர் அருகேயுள்ள கால்வாய் மூலம் 4,000 கன அடி கடலுக்குச் செல்கிறது. கடலுக்குச் செல்லும் தண்ணீர் அதிகளவில் வந்ததால் ஆர்.காவனூர் காலனி, துணை மின்நிலையம், காரேந்தல், தொருவளூர் உள்ளிட்ட கிராமங் களுக்குள் வெள்ள நீர் புகுந்து வீடுகளை சூழ்ந்துள்ளது. மேலும் கரையோர கிராமங்களான மென்னந்தி, காருகுடி, முதலூர் உள்ளிட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்து வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதனால் இப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்ததுடன், ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல், மிளகாய் பயிர்களை மூழ்கடித்துள்ளது. கடலுக்குச் செல்லும் தண்ணீர் தொருவளூர் அருகே காரேந்தல் சாலையைத் துண்டித்தது. இதனால் காரேந்தல் கிராமம் தனித்தீவானது. ஆர்.காவனூர் பாலப் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு, ராமநாதபுரம் - நயினார்கோவில் சாலையை மூழ்கடித்தது. 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தவிக்கின்றனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், ஆர்டிஓ ஷேக் மன்சூர், வட்டாட்சியர் ரவிச்சந்திரன் பாதிக்கப்பட்டவர்களை பாது காப்பான இடங்களில் தங்க வைத்து உணவு உள்ளிட்ட வசதி களை ஏற்படுத்தி கொடுத்தனர்.
பரமக்குடி
பரமக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும், கிராமங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை முதன்மைச் செயலரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான தர்மேந்திர பிரதாப் யாதவ், ஆட்சியர் சங்கர்லால் குமாவத் ஆகியோர் பார்த்திபனூர் மதகு அணையை பார்வையிட்டு நீர்வரத்து குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். ஏனாதிகோட்டை கிராமத்தில் வெள்ளத்தால் மூழ்கியுள்ள நெற்பயிர்களை பார்வையிட்டனர். நெற்பயிருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
பின்பு பரமக்குடி அரசு பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நரிக்குறவர் இன மக்களை சந்தித்து பேசி ரேஷன் கார்டு வழங்க உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago