தஞ்சாவூர்: சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகமும் ஓஎன்ஜிசியும் இணைந்து விவசாயிகளுக்கு 4 நாள் இலவச பயிற்சி அளித்தன.
இயற்கை விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் மூலம் விவசாயத்தில் நிலையான வாழ்வாதாரத்தை அடைவது எப்படி என்ற தலைப்பில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது. விவசாயிகளை இந்த துறைகளில் ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தும் நோக்கத்தில், சாஸ்த்ராவும் ஓஎன்ஜிசியும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த 4 நாள் பயிற்சியில் இயற்கை விவசாயம், மூலிகை மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப முறைகளை கையாளுதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்காக புதுக்கோட்டை அருகில் உள்ள குடும்பம் என்னும் இயற்கை விவசாய பண்ணைக்கும், உணவு பதப்படுத்துதல் பற்றி அறிந்துகொள்ள தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். சாஸ்த்ராவில் உள்ள தொழில்நுட்ப மையங்கள் மூலம் விவசாயத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, ட்ரோன் பயன்பாடு, நீர் மேலாண்மை, மண் பரிசோதனை ஆகியவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
6 தொகுதிகளாக நடத்தப்பட்ட இந்த பயிற்சிகளில் மொத்தம் 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். டிச.2-ம் தேதி நடைபெற்ற நிறைவு விழாவில், விவசாயிகள் விவசாயத்தில் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகளை எடுத்துரைத்தனர். அதற்கு தீர்வுகான வழிமுறைகள் ஆராயப்படும் என சாஸ்த்ராவும், ஓஎன்ஜிசி நிறுவனமும் உறுதியளித்தன. நிறைவு விழாவில், ஓஎன்ஜிசியின் காரைக்கால் மண்டல மேலாளர் செபாஸ்டின், பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ், நினைவுப்பரிசை வழங்கினார். வருங்காலங்களில் பல விவசாயிகளுக்கு இந்த பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. சாஸ்த்ரா சார்பில் டாக்டர் பத்ரிநாத் மற்றும் சீனிவாசன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago