தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே சரக்கு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போலீஸாருக்கு எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையற்கரசி தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் தேரியூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். சரக்கு வாகனங்களில் பெட்டி பெட்டியாக புகையிலைப் பொருட்கள் இருந்தன. 4 வாகனங்களையும், அவற்றில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான 1,100 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
அந்த வாகனங்களில் வந்த திருநெல்வேலி மாவட்டம் பணகுடி மாதா கோயில் தெருவை சேர்ந்த ராஜாகனி (44), மணிகண்டன் (32), கோயில்விளையைச் சேர்ந்த இலங்காமணி (32), பணகுடி அருகேயுள்ள லெப்பைகுடியிருப்பை சேர்ந்த ஆல்பர்ட் ராஜன் (37), உடன்குடி தேரியூரைச் சேர்ந்த சித்திரைசெல்வன் (30), மோகன்ராஜ் (28) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த ரூ.22 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக குலசேகரன் பட்டினம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago