தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் மறியலில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் 108 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களின் நல வாரிய சட்டங்களை திருத்தக்கூடாது. பணப்பலன்களை பெறுவதற்கு தொழிலாளர்களின் பங்களிப்பை கட்டாயப்படுத்தும் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். மாத ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளியின் குழந்தைகளுக்கு 1-ம் வகுப்பிலிருந்து கல்வி நிதி வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய முத்தரப்பு கூட்டத்தை உடனடியாக நடத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சிதம்பரனார் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரா.பேச்சிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் க.காசி முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியல் செய்த 35 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவில்பட்டி
இதேபோல் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்புநடைபெற்ற போராட்டத்துக்கு கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சொ.மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் எம்.தெய்வேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் யு.செல்வகுமார், சி.அந்தோணிச்செல்வம், சிஐடியூ மாநிலகுழு உறுப்பினர் ஆர்.கிருஷ்ணவேணி, நகரத் தலைவர் என்.மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உட்பட 73 பேரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago