தூத்துக்குடியில் முதல்வர் ஆய்வை தொடர்ந்து மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக கோவையில் இருந்து 7 ராட்சத மோட்டார்கள் ரூ.52 லட்சம் செலவில் வரவழைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் கடந்த 25-ம் தேதி பெய்த அதி கனமழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதற்கு பிறகு அவ்வப்போது லேசான மழை பெய்தது. கடந்த மூன்று நாட்களாக அறவே மழை இல்லை. பகல் நேரத்தில் வெயில் அடிக்கிறது.
இருப்பினும் பிரையண்ட்நகர், சிதம்பரநகர், அம்பேத்கர் நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், ராம் நகர், ஆதிபராசக்தி நகர்உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை சூழ்ந்த மழைநீர் 10 நாட்களாகியும் இன்னும் வடியாமல் தேங்கி நிற்பதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மழைநீரை வெளியேற்ற விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி மாநகரில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், ராம்நகர், ஆதிபராசக்தி நகர் பகுதிகளில் ராட்சத மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார். பொதுமக்களை சந்தித்து குறைகளையும் கேட்டறிந்தார். மழைநீரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்களிடம் தெரிவித்தார். ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் தி.சாரு, ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏ செ.சண்முகையா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் மழைநீரை வெளியேற்றும் பணிகளுக்காக கூடுதலாக 7 ராட்சத மோட்டார் பம்புகள் கோவையில் இருந்து ரூ.52.17 லட்சம் செலவில் வாங்கி வரப்பட்டுள்ளன. 56 எச்பி திறன் கொண்ட 5 பெரிய நீர் இறைக்கும் மோட்டார் பம்புகளும், 30 எச்பி திறன் கொண்ட 2 மோட்டார் பம்புகளும் லாரிகள் மூலம் நேற்று மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டன.
இவற்றை தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி நேரில் பார்வையிட்டு. எந்தெந்த பகுதிகளுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர் பகுதிகளில் இவை பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஒரு வாரத்துக்கு பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. தூத்துக்குடியில் உள்ள சில பள்ளிகளின் வளாகங்களில் மழைநீர் தேங்கி நின்ற போதிலும் மாணவ, மாணவியர் பாதுகாப்பாக வரவழைக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன. மழை பெய்யாமல் இதே நிலை நீடித்தால் தூத்துக்குடி மாநகரில் தேங்கியுள்ள மழைநீர் இன்னும் சில நாட்களில் வடிந்துவிடும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago