செங்கம் பேரூராட்சியில் சாலையோரத்தில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் குப்பை கழிவுகள் அகற்றுவதில் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதனை உறுதி படுத்தும் வகையில், செங்கம் நீதிமன்றத்துக்கு செல்லும் சாலையில் காய்கறி கழிவுகள், இறைச்சி கழிவுகள் மற்றும் நோய் தடுப்பு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றமும் வீசுகிறது.

மேலும், கழிவுகளை உட் கொள்ள கால்நடைகள் அதிகளவில் குவிகின்றன. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சாலையில் திடீரென ஓட்டம் பிடிக்கும் கால்நடைகளால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அவர்கள் ஓட்டி வரும் வாகனங்கள் மீது கால்நடைகள் மோதிவிடுவதால், கீழே விழுந்து படுகாயமடைகின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும் போது, “சாலையில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். கழிவுகளை கொட்டுபவர்களை தண்டிக்க வேண்டும். மேலும், சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிவதையும் தடுத்து நிறுத்த வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE