‘புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது’ :

ராணிப்பேட்டை: புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன் மாதிரி மாநிலமாக உள்ளது என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு பகுதிகளில் 18 வழித்தடங்களில் புதிய பேருந்துகளின் சேவையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் ஆர்.காந்தி பேசும்போது, ‘‘மக்களின் போக்குவரத்து வசதிக்காக புதிய பேருந்துகளை தொடங்கி வைத்துள்ளோம். மக்களின் கோரிக்கை என்பதால் இது மக்களாட்சி. மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற 2 மாதங்களில் கரோனாவை கட்டுப்படுத்தி உலகமே பாராட்டும் அளவுக்கு ஆட்சி செய்தார். கருணாநிதி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவார்கள். அதைபோன்று தற்போது புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன் மாதிரி மாநிலமாக உள்ளது’’ என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபாசத்யன், எம்எல்ஏ ஈஸ்வரப்பன், அரசு போக்குவரத்து பொது மேலாளர் நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE