மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கோபால்(40). அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (54), ஹரி (40), ரகுநாதன் (39) ஆகியோர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்கள் மதுரை மற்றும் திருநெல்வேலியில் உள்ள தனியார் ஆலைக்கு தங்களது வாகனங்களில் பணியாளர்களை ஏற்றிச்செல்லும் வேலையை செய்து வருகின்றனர். கோபால் உள்ளிட்ட 4 பேரும் நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து காரில் திருநெல்வேலிக்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை கோவில்பட்டி அருகே இடைசெவல் பகுதிக்கு கார் வந்தபோது, சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோபால், முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவர்களது கார் விபத்துக்குள்ளானபோது மின் கம்பத்தில் இணைக்கப்பட்டிருந்த வயர்கள் பயங்கர தீ பொறிகளுடன் அறுந்து சாலையின் நடுவே கீழே விழுந்தன. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியது. அப்போது பின்னால் மற்றொரு காரில் வந்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஊர்காவல்படை கமாண்டர் ஆர்.கண்ணன், விபத்து நடந்ததை கவனித்து தனது காரை சாலையின் குறுக்கே நிறுத்தினார்.
மின் வயர் அறுந்து கிடந்ததால் விபத்து நடந்த பகுதிக்கு வேறு எந்த வாகனங்களும் சென்று விடாதபடி தடுத்து நிறுத்தினார்.
நாலாட்டின்புதூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் காயமடைந்த ஹரி மற்றும் ரகுநாதன் ஆகியோரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்து நடந்த பகுதியில் வயர் அறுந்து கிடந்ததை கவனித்து உடனடியாக மற்ற வாகனங்களை தடுத்து நிறுத்திய ஓய்வுபெற்ற ஊர்க்காவல் படை கமாண்டர் கண்ணனை டிஎஸ்பி உதயசூரியன் மற்றும் போலீஸார் பாராட்டினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago