திருப்பூரில் பருவமழை கொட்டித்தீர்த்தும் தண்ணீர் வரத்தில்லாத நீர்நிலைகள் : நீர்வழித்தடங்களை மீட்க சிறப்பு திட்டம் தேவை

By பெ.ஸ்ரீனிவாசன்

திருப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை கொட்டித் தீர்த்தும் தண்ணீர் வரத்தின்றி குளம், குட்டைகள் வறண்டு கிடப்பது, விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மா.வேலுசாமி ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

தொடர் கனமழை பெய்து அனைத்து ஊர்களிலும் நீர்நிலைகளான குளம், குட்டைகள், கண்மாய்களில் நீர் நிறைந்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உபரிநீர் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் மேட்டுப்பகுதி எனப்படும் நொய்யலாற்றின் வடக்கே மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்காலுக்கு தெற்கேயுள்ள கோவை மாவட்டம் காரமடை முதல் திருப்பூரை அடுத்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை வரையுள்ள பல பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து இதுவரை இல்லை. உதாரணமாக அவிநாசியில் உள்ள சங்கமாங்குளம், தாமரைக்குளம், நல்லாறு போன்றவை உள்ளன.

இதற்கு, நீர்நிலைகளுக்கான நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதே முக்கிய காரணமாகும். கோவை மாவட்டம் அன்னூர் அருகே தொடங்கும் நல்லாறு, திருப்பூர் மாவட்டம் நஞ்சுண்டராயன் குளத்தில் சென்று நிறைவு பெறுகிறது. சுமார் 125 அகலம் கொண்ட நல்லாற்றின் நீர்வழித்தடம், தற்போது பல இடங்களில் வெறும் 15 அடி அகலம் வரை மட்டுமே உள்ளது.

தமிழக அரசு உடனடியாக சிறப்புத் திட்டம் ஒன்றை வகுத்து, வல்லுநர் குழுவை அமைத்து ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள நீர்நிலைகள், அவற்றுக்கான நீர்வழித்தடங்களை கண்டறிந்து மீட்க வேண்டும். அப்போதுதான் மழைநீரானது, நீர்வழித்தடங்கள் மூலமாக சென்று நீர்நிலைகளை நிரப்பும். இல்லையென்றால் குடியிருப்புகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

மேற்கூறப்பட்ட 3 மாவட்டங்களிலும் வரும் அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் பாசனத் திட்டத்தை உரிய காலத்துக்குள் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டத்தில் விடுபட்டுள்ள குளம், குட்டைகளையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்