தமிழகம், புதுச்சேரியில் வெள்ள சேதங்களை - மத்திய குழுவினர் இன்றுமுதல் 2 நாட்கள் ஆய்வு : 24-ம் தேதி முதல்வருடன் முக்கிய ஆலோசனை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் வெள்ள சேத பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக 7 பேர் கொண்ட மத்திய குழு நேற்று சென்னை வந்தது. இந்தக் குழுவினர், இரு அணிகளாகப் பிரிந்து இன்றும், நாளையும் 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வெள்ள சேத பாதிப்புகளை ஆய்வு செய்கின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. முதல்வர் உத்தரவின்பேரில் அமைச்சர்கள் குழு, டெல்டா மாவட்டங்களில் ஆய்வுசெய்து பயிர்ச் சேதம் குறித்த அறிக்கையை அளித்தது. அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட கோரிக்கை மனுவை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வழங்கினார். வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.2,629 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. முதல்கட்டமாக ரூ.549.63 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் வெள்ள சேதங்களைப் பார்வையிட 7 பேர் கொண்ட மத்திய குழு நேற்று பகல் 1 மணிக்கு சென்னை வந்தது. பிற்பகல் 3.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்ட உயரதிகாரிகளுடன்மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர். அப்போது, வருவாய் நிர்வாக ஆணையர் கே.பனீந்திர ரெட்டி, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள சேத விவரங்களை விரிவாக எடுத்துரைத்தார்.

பின்னர் சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு (ரிப்பன் மாளிகை) வந்தமத்திய குழுவினர், அங்கு வைக்கப்பட்டிருந்த வெள்ள சேத பாதிப்புகள்குறித்த புகைப்படங்களை பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இன்றுமுதல் ஆய்வு

இதைத் தொடர்ந்து மத்திய குழுவினர் இரு அணிகளாக பிரிந்து இன்றும், நாளையும் வெள்ள சேத பகுதிகளை பார்வையிடுகின்றனர்.

உள்துறை அமைச்சக இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான முதல் அணியில் வேளாண்மை, கூட்டுறவு,விவசாயிகள் நலன் துறை இயக்குநர் (தகவல் தொழில்நுட்பம்) விஜய் ராஜ்மோகன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக மண்டல அலுவலர் ராணஞ்சாய் சிங், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக சார்புசெயலாளர் எம்.வி.என்.வரபிரசாத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியை வருவாய் நிர்வாக ஆணையர் கே.பனீந்திர ரெட்டி வழிநடத்துகிறார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுமேலாளர் என்.சுரேஷ் தொடர்பு அதிகாரியாக செயல்படுகிறார்.

இந்த அணியினர் இன்று (நவ.22) காலை 9 முதல் பகல் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் (வரதராஜபுரம்) மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். பகல் 2.45 மணிக்கு புதுச்சேரி செல்கின்றனர். அங்கு மாலை 4.15 முதல் 6.30 மணி வரை வெள்ள சேதங்களை பார்வையிடுகின்றனர்.

நாளை காலை 10 முதல் பகல் 12 மணிவரை கடலூர் மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.

பகல் 12 முதல் 1.30 மணி வரை மயிலாடுதுறை மாவட்டத்திலும் 2.30 முதல் 6.30 மணி வரை நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் வெள்ள சேதங்களை பார்வையிடுகின்றனர். அங்கிருந்து திருச்சி செல்லும் முதல் அணியினர் இரவு 9.30 மணிக்கு சென்னை திரும்பு கின்றனர்.

மத்திய நிதி அமைச்சக ஆலோசகர்ஆர்.பி.கவுல், நீர்வள அமைச்சக இயக்குநர் ஆர்.தங்கமணி, எரிசக்தி அமைச்சக உதவி இயக்குநர் பவ்யா பாண்டே ஆகியோரைக் கொண்ட இரண்டாவது அணியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் குமார் ஜெயந்த் வழிநடத்துகிறார். தமிழ்நாடு மின் ஆளுமை ஏஜென்சி இணை இயக்குநர் எஸ்.வெங்கடேஷ் தொடர்பு அதிகாரியாக செயல்படுகிறார்.

இந்த அணியினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (நவ.22) காலை தூத்துக்குடி செல்கின்றனர். அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி செல்லும் குழுவினர். மதிய உணவுக்கு பிறகு பகல் 2 முதல்6 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். பின்னர் தூத்துக்குடி வந்து தங்குகின்றனர். நாளை காலை 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகின்றனர். அங்கிருந்து வேலூர் செல்லும் இந்த அணியினர், பகல் 2.30 முதல் 6 மணிவரை வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிடுகின்றனர். இதையடுத்து 24-ம் தேதி காலை 10 மணிக்கு மத்திய குழுவின் இரு அணியினரும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்திவிட்டு, மாலை 4.15 மணிக்கு டெல்லி திரும்புகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்