சென்னையில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்தவர் தீபக் பால் (35). அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், தனது சக நண்பர்களுடன் சென்னையில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்துவந்தார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து குவாஹாட்டிக்கு மதியம் 3:55க்கு கிளம்பும் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.
விமானம் கிளம்புவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக காத்திருப்போர் அறையில் இருந்த தீபக் பாலுக்கு திடீரென வலிப்பு நோய் வந்துள்ளது. உடனடியாக அங்கிருந்த விமான நிலைய ஊழியர்கள், ஆம்புலன்ஸில் தீபக்கை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளித்த பின்னர் தீபக் பாலின் உடல்நிலை தேறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலையில் அசாம் செல்லும் விமானத்தில் செல்வதற்காக தீபக் பால்விமானநிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு மீண்டும் வலிப்பு நோய் ஏற்பட்டுஉள்ளது. மீண்டும் ஆம்புலன்ஸ்வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே தீபக் பால் உயிர்இழந்தார்.
இதனால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்ட தீபக் பாலின் உடல், விமான நிலையத்துக்கு வெளியே சாலை ஓரத்தில் போடப்பட்டது. அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் சுமார் ஒரு மணி நேரம் அவரது உடல் மழையில் நனைந்தது.
பின்னர் விமானநிலைய அதிகாரிகள் மீனம்பாக்கம் காவல் துறையிடம் கொடுத்த தகவலையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பல்லாவரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தீபக்கின் உடலை மழையில் போட்டுவைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தீபக் இறந்தது குறித்து விமானநிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago