பட்டியலின, பழங்குடியினருக்கு பட்டா - பட்டியலை இணையத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு :

தமிழகம் முழுவதும் பட்டியலின மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கியது தொடர்பான பட்டியலை இணையத்தில் பதிவேற்றம் செய்யுமாறு தமிழக ஆதிதிராவிடர் நலத் துறைக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக இ.குமார் என்பவர் பொன்னேரி தனி வட்டாட்சியருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அனுப்பிய மனுவில், திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரையடுத்த பொத்தூர் கிராமத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா எந்தெந்த பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது என்பது குறித்ததகவல்களை தருமாறு கோரிஇருந்தார்.

அதற்கு தொடர்புடைய அதிகாரியிடமிருந்து உரிய பதில் வரவில்லை என்பதால் இது தொடர்பாக மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.

அந்த வழக்கை விசாரித்த மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ், தமிழகம் முழுவதும் பட்டியலின மற்றும் பழங்குடிஇனத்தவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியது தொடர்பான பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழக ஆதிதிராவிடர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் பொத்தூர் கிராமத்தில் யார், யாருக்கு இலவசவீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை 7 நாட்களுக்குள் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என பொன்னேரி தனி வட்டாட்சியருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது என்பது குறித்து 2 மாதங்களில் ஆணையத்துக்கு பதிலளிக்க வேண்டும் என ஆதிதிராவிடர் நலத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜன.19-க்கு தள்ளி வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE